Thursday, November 28, 2024

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. நேஷனல் லாட்ஜ்

 


நாவின் ஆந்திரத் தாகம்!

சென்னைமாநகரின் உணவுப்ப்ரியர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இது! ஆனாலும் நமது விருப்பமான சோற்றுக்கடைகளுல் இதுவும் ஒன்று! 

தேடி உணவு உண்ணும் வழமை உடையவன் தஞ்சையின் நாவுகளுக்கு சொந்தக்காரன் நண்பன் அருமை யோகேஸ்வரன் வள்ளிநாயகம், அவனோடு நாம் இன்னும் பயணித்தால் சோற்றுக்கடை புராணம் பலநூறு கட்டுரைகள் தாண்டும்! சமீபத்தில் எங்கள் நண்பன் மீனாட்சி சங்கர் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு சென்னை சென்றிருந்தோம்!

 அவ்வமயம் தனது இல்லத்தில் தங்க வேண்டும் என்று அன்புக்கட்டளை யோகேஷிடமிருந்து! என் இல்லாள் மற்றும் மகளோடு சிறப்பாய் அமைந்த அந்த பயண முடிவில் நாங்கள் சுமார் பத்து கிலோ ஏறிவிட்டோம் என்றால் மிகையல்ல.

அசைவ உணவுகள் மீது மிகுந்த ப்ரியமுடைய யோகி எங்களுக்காக சைவ உணவுகளைத் தேடித்தேடி இட்டுச் சென்றது அன்பின் பேரழகு!


சென்னையில் சௌகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் அமைந்துள்ள நேஷனல் லாட்ஜ்க்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கொடும்பசி விழி முட்டிய வேளையில்! 

வெகுநேர காத்திருப்புக்குப் பின் அருளால் கிட்டிய ஆசனத்தில் அமர்ந்து இருக்க, உணவு நம்மை அணைக்க வந்தது!

நல்ல வாழை இலையில் புளித்தொக்கு, உருளைப் பொறியல், பருப்பு கூட்டு, வலதுப்புற ஓரத்தில் தனக்கான இடம் என அமர்ந்த கோங்குரா சட்னி! பரிமாறும் போதே எப்படி சாப்பிட வேண்டும் என்ற பாடம் எடுத்தனர் திரு.யோகேஷ் மற்றும் மருத்துவர். நந்தினி யோகேஷ் ஆகியோர்! 

பருப்புப்பொடி வந்தது, நெய்க்குளம் வெட்டி சோற்றோடு குழப்பி பருப்பு கூட்டு கலந்து சற்றே கோங்குரா சட்னியைத் (புளித்தக்கீரை) தொட்டு தொண்டைக்குழியில் இறக்கையில் நாவரும்புகள் நன்றி சொல்லியது! கண்கள் பனிக்கப் பணிக்கப்பட்டது! என்னே ருசி!


நெடுங்காலமாக சென்னையில் பலர் ஆந்திரா மெஸ் பற்றிக் கூறியிருந்தாலும் நண்பன் இட்டுச்சென்ற சோற்றுக்கடை ........ இதில் நான் எதையும் நிரப்பவில்லை! உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்!

அடுத்து வந்த சாம்பார், இரசம், காரக் குழம்பு, மோர்க்குழம்பு, மோர் என வரிசையில் கும்பி நிறைந்தது!

சூடான சாதத்தில் இவையனைத்தும் ஐக்கியமாகி வயிறெனும் பானையை நிரப்பியது! மாங்காய் ஊறுகாய் வேறு ருசியாக இருந்தது!

கடைசியாக சீனி கொண்டாங்க என்றார் நமது நண்பர், வைத்திருந்த தயிரில் சர்க்கரை கலந்து அருமையான பண்டமாக்கித் தந்தார்! நெஞ்சும், வயிறும், கண்ணும் நிறைந்த உணவைத் தந்தருளிய சென்னை மாநகரிற்கு பெருநன்றி! 

வெளியே வருகையில், பருப்பு பொடி, ஊறுகாய் கிடைக்கும் என்றார்கள், வாங்கலாமா என்று மனைவியிடம் அனுமதி கேட்டால் சில உணவுகள் சாப்பிட நீங்கள் அந்தந்த இடத்துக்குத் தான் அழைத்து வரவேண்டும் என்று கட்டளை வந்தது! பதில் பேச முடியுமா???? கேள்வியை அனுபவஸ்தர்களுக்கே விட்டு விடுகிறேன்!


- கோமதி சங்கர் சுந்தரம்

Tuesday, November 26, 2024

சபரிமலையில் அரசியல் செய்யும் நீலம் கும்பல் - கமலிகணேசன்...




தொடர்ந்து இந்து வழிபாட்டை கேள்வி கேட்கும்  பிற்போக்குவாதிகள் கிறிஸ்தவ இசுலாமிய வழிபாடு என்று வந்துவிட்டால் பகுத்தறிவு வேலை செய்யாது. 

ஏனெனலில் இந்து வழிபாடு மட்டுமே மூடநம்பிக்கை என்று இவர்கள் பரப்புரை செய்வதற்கு பின் ஒரு அரசியல் உண்டு. 

வெங்கட்பிரபுவிடம் உதவியாளராக பணிபுரிந்த பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படம் மூலம் அறிமுகமாகி மெட்ராஸ் படத்திற்கு பிறகு புகழ் பெறுகிறார். இந்த புகழ் வெளிச்சத்தில் நீலம் என்கிற ஒரு பண்பாட்டு மையத்தை உருவாக்குகிறார்கள். 

இவர்களின் இந்துமத வெறுப்பு மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் தொடங்கி தற்போது இசைவாணியின் ஐ எம் சாரி ஐயப்பாவில் வந்து நிற்கிறது. 

மார்கழியில் இந்து மத மரபினரான சைவர் திருவெம்பாவை படிப்பதும், வைணவர்கள் திருப்பாவை படித்து நோன்புகளை கடைப்பிடிப்பது வழக்கம். அந்த மாதத்தில் தான் எந்த பண்பாட்டு தொடர்பும் இல்லாத மார்கழியில் மக்களிசை என்று இந்துமத எதிர்ப்பை காட்ட போட்டிக்கு இதை தொடங்கினர். 

அதன் தொடர்ச்சிதான் இங்கு வந்து நிற்கிறது.
இதற்குபின் உள்ள அரசியலை ஒவ்வொரு இந்துக்களும் உணர வேண்டும்.

இவர்கள் தங்களை பெளத்தர்கள் என்று அடையாளபடுத்தி கொள்கிறார்கள். ஆனால் பெளத்த குருமார்களின் வழி பெளத்த மரபை இவர்கள் கடைப்பிடித்து நாம் பார்த்ததில்லை. 
இவர்கள் இந்த முகமூடிகளுக்குள் ஒளிந்து இருக்கும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் என்பதை நாம் உணர வேண்டும். 

இவர்களின் தொடர்ச்சியான பரப்புரை என்னவென்றால் இந்து மதத்தில் சாதி ஏற்றதாழ்வு உண்டு பெண்ணடிமைத்தனம் உண்டு என்று பரப்புவார்கள். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இது ஒரு குறிப்பிட்ட மக்களை குறிவைத்து நடக்கும். 

ஆனால் இந்து மதத்தில் சிலரின் சுயநலத்திற்காக அதுபோன்று நடத்தபட்டிருக்கலாம். ஆனால் வாழ்வியலை பொறுத்தவரை இங்கு அனைவருக்கும் சம மரியாதை வழங்குவதை தான் நோக்கமாக கொண்டுள்ளோம். சோழநாட்டில் திருவாரூர் கோவிலில் யானை ஏறும் பெரும்பறையர் எனும் நிகழ்வு சிறப்பாக இன்றும் கொண்டாடபடுகிறது. அந்த நிகழ்வில் யார் சாதி பார்க்கிறார்கள். இதுதான் நமது வாழ்வியல். அதன்பிறகு பெண்ணடிமைத்தனம் என்கிறார்கள் பெண்ணை வீரத்தின் அடையாளமாக போற்றக்கூடிய மரபு நமது மரபு.  கொற்றவை வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் போர்தெய்வ வழிபாடாக உள்ளது. இதுதான் நமது மரபில் பெண்களின் நிலை! 

ஆனால் இதை எல்லாம் மறைத்து இவர்கள் சில இடங்களை தேர்ந்தெடுத்து பிரச்சனையை துவக்கி ஒருசாரரை இவர்களின் ஆதரவாக மாற்றி எடுப்பது தான் இவர்களின் நோக்கம்.
அப்படி இவர்களின் வலையில் சிக்குபவர்கள் வெகுவிரைவாக கிறிஸ்தவர்களாக மாற்றபடுவார்கள்.

இதுபோன்ற பரப்புரைக்கு பின் நடக்கும் விசயங்கள் இதுவெல்லாம். 

சபரிமலை கோவிலை பொறுத்தவரை சாஸ்தா வழிபாடு அதற்கென சில விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அது அந்த வழிபாட்டின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். நம்பிக்கையற்ற உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை? இல்லை அந்த விதிகளை மீறி செயல்படுவோம் என சொல்பவர்கள் முதலில் கிறிஸ்தவ இசுலாமிய விதிகளை மீறி புரட்சி செய்துவிட்டு வாருங்கள் அதன்பிறகு இதை பற்றி எல்லாம் பேசுவோம்.

இதுபோன்ற விதிகளும் கட்டுப்பாடுகளும் இந்து மதத்தில் மட்டுமே இருக்கிறது என்று கூறும் பரப்புரையே முதலில் அபத்தமானது.

இந்து மதம் என்ற பெயரில்  இங்கு பல்வேறு வழிபாட்டு நெறி உண்டு அவரவர் அவரவர் நெறியை அழகாக எந்த பிரச்சனையும் இல்லாமல் கடைபிடித்து தான் வருகின்றனர். 

ஆனால் இதுவெல்லாம் பிரச்சனையாக்குபவர்களின் அரசியலுக்கு பின் மிகப்பெரிய ஆயுதமாக சினிமா வெளிச்சமும் ஊடக அரசியலும் பக்கபலமாக இருக்கிறது. 

நமது உயரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் சிதைத்து நம்மை அடிமைபடுத்துவதன்றி இதற்கு பின் வேறென்ன அரசியல் இருந்துவிட போகிறது.

இந்து மதத்தில் தாழ்ந்தவர் என்றோ உயர்ந்தவர் என்றோ யாரும் கிடையாது அப்படி எல்லாம் சிலர் கூற துவங்குகிற போதெல்லாம் சித்தர்களும் ஒளவையும் வைகுந்தர் வள்ளலார் போன்ற ஞானியர்கள் அதை கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர். அதுவே இந்து மதம்.

நாம் இன்று மாபெரும் பண்பாட்டு புரட்சியை நோக்கி தள்ளப்படுகிறோம்...

- கமலிகணேசன்

Monday, November 18, 2024

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. சங்கர் ஸ்வீட்ஸ்

 தத்துவம் பேசும் சங்கர் அண்ணன் கடை


நெல்லையப்பர் ஆலயத்தின் சொக்கப்பனை மூக்கில் ஒரு தனி அடையாளம் எங்கள் சங்கர் அண்ணனின் சங்கர் ஸ்சுவீட்ஸ் கடை. அவாளை நாங்கள் சங்கர் அண்ணன் என்றாலும் அவர் பெயர் லெக்ஷ்மணன் என்பதாம்.

விபரம் தெரிந்த வயதில் இருந்தே நாம் செல்லும் எளிமையான பலகாரக்கடை. அண்ணன் கடையில் வாடிக்கையாளர் தமக்கு என்றைக்குமே ராஜ மரியாதை தான். சென்றவுடன் கையில் அப்போது தயார் செய்த பண்டம் ஒன்றே நாம் சுவைக்க இருக்கும்.

பழைய பண்டம் என்றுமே தருவதில்லை, சிறிய கடை, அதன் பின்னால் சிறு தயாரிப்பு கூடம்! சூடச்சூட பண்டங்கள் நம் வசம் அருமையாகத் தரும் அண்ணன் கரங்கள் தூய்மையானவை. 

உண்ணும் உணவோடு உணவருந்தவந்தோர் உணர உன்னதமான உணர்ச்சிவாக்கியங்களை உருவாக்கியருளும் உத்தமர் உறையும் உணவுப்பண்டசாலை.

அண்ணன் கடை தத்துவங்களுக்கு என் வட்டாரத்தில் நிரம்ப இரசிகர்கள் உண்டு. என் புலனச்சுவற்றில் அடிக்கடி அண்ணன் கடை தத்துவங்கள் மிளிரும்! நண்பர் சிவ.நடராஜும் நானும் சேர்ந்தால் இங்கு சுக்குக் காபி குடும்பத்தோடு அருந்துவோம், அருமை நண்பன் மீனாட்சி சங்கருக்கு நெய்க்கடலை, என் மகளுக்கு அண்ணன் கடை பூந்தி, இங்கு சூடச்சூட தயாராகும் அனைத்து பட்டங்களும் நமக்கு ப்ரியமே! அண்ணன் அல்வாவிற்கு அருமையான சுவையுண்டு!அதிலும் இங்குள்ள நெய்விளங்காய் என்றுமே நெஞ்சில் தனியிடம் அமர்ந்தது தான்.

சுக்குக் காபியில் என்ன சேர்க்கிறேன் என்று கையால் எழுதிய அட்டவணைகள் அண்ணன் கடையில் அளவுக்குறிப்போடு தொங்கும்!

என்று போனாலும் மகா டூரிஸ்ட் இட்டுச்செல்லும் புதுச் சுற்றுலா பட்டியல் இங்கு தொங்கும், மேலும் சில உள்ளூர் வணிகர்களது விளம்பரமும் இங்குண்டு. 

இவை அனைத்தையும் தாண்டி குணத்தில் தங்கமான அண்ணன் கடையில் என்று போனாலும் அன்று நம் நெஞ்சினிக்க செய்தி பலரை சிந்திக்கச் செய்யும் வண்ணம் சிலேட்டில் கையால் எழுதப்பட்டிருக்கும். நாளும் ஒரு சிந்தனை நவிலும் அண்ணன் கடையை நெல்லையில் மறவாதீர்.


- கோமதி சங்கர் சுந்தரம்

Wednesday, November 13, 2024

INDUS English




இராஜராஜ சோழன் சதய விழா சிறப்பிதழ்.
அருண்மொழி வர்மன் எனும் ராஜராஜ சோழன் காலம் சைவர்களின் பொற்காலம். திருமுறை கண்ட சோழன் எனும் பெருமைகொண்ட சிவபாத சேகரனின் சதயவிழா முன்னிட்டு நமது இண்டஸ் ஆங்கில இதழில் ராஜராஜ சோழன் குறித்த வரலாற்று சிறப்பு கட்டுரைகள் வெளிவந்துள்ளது.

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்க...

சிவசக்தியின் திருவருளால் ...

INDUS இதழ் : Download Pdf

INDUS தமிழ் 51



இந்த வார இண்டஸ் இதழ் உங்களுக்காக! 
இந்த வார இதழில் சைவ சமய ஆய்வாளர் கந்தசாமி அவர்களின் சிறப்பு கட்டுரையும் கோமதி சங்கர் அவர்களின் சுவைமிகு கட்டுரையும் மற்றும் எனது நாவாய் தொடரும் நமது அன்பர்களின் கட்டுரைகளும் வெளிவந்துள்ளது.  

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்க.

சிவசக்தியின் திருவருளால்... 

INDUS இதழ் : Download Pdf

Monday, November 11, 2024

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. சாலியர் தெரு மணிகண்ட விலாஸ்!

 


சாலியர்தெரு மணிகண்ட விலாஸ்


இந்தக் கடையிருப்பதே நமக்குத் தெரியாது! தொண்டர்கள் நயினார் கோவிலில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழித்தடத்தில் சைவ மருத்துவ சமுதாய அனவரத விநாயகர் ஆலயத்திற்கு சமீபத்தில் பசுமையான ஒரு பழைய மரத்தடியில் அமைந்த சிறு உணவுக் கடை இது.

எனது இரண்டாவது மூத்த சகோதரருக்கு வரன் பார்த்து வந்த வேளையில் ஒருநாள் என் தந்தையார் எம்மை அழைத்து இந்தக் கடைக்கான வழியைக் கூறி கடையின் உரிமையாளரைச் சந்தித்து அவர்களின் கடைக்கருகே ஒரு வரன் இருப்பதாகக் கூறினார், அந்த‌ வரன் விபரங்களை வாங்கி வா என்றார்.இதைக்கூறி முடித்துவிட்டு மணிகண்ட விலாஸ்ல சாப்டுருக்கியா, அருமையா இருக்கும் என்றார்? அப்போது தான் காலை உணவு கும்பி முட்ட உண்டு வரும் எனக்கு இது தேவையில்லாத கேள்வியாகத் தோன்றியது..... ஆனாலும் நெஞ்சோரத்தில் இந்தக் கடையில் உண்ண ஆர்வம் இருந்தது, ஆனால் வயிற்றில் இடமில்லையே !


பின்னர் ஒரு நாள் எமது நண்பன் பூபதியும் நானும் மானூர் கிளம்பிச் செல்லும் காலையில் நண்பனை மணிகண்ட விலாஸ் இட்டுச் சென்றோம்.காலையில் சூடான பொங்கல், ஃபுஃப்வென்ற பூரிப்பான பூரி, மெது மெது இட்லி, மொறு மொறு காரவடை என்று அனைத்தையும் பரிசோதித்தோம்! இதில் இந்தக் கடையில் காலையிலேயே ஆப்பமும், தயிர்சாதமும் உண்டாம்! அதை உண்டதில்லை!


இந்தக் கடை நெல்லை நகரின் மிகப்பழைய சோற்றுக்கடைகளுல் ஒன்று, அன்றாடம் காலை நாட்சம்பளத்திற்காக வேலைக்கு செல்லும் அனைவருக்கும் கேந்திரமாக உள்ளது.மேஸ்திரிகள், தச்சர்கள், பெயிண்டர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் உழைக்கும் வர்க்கத்தினரை தாம் அழைத்துச் செல்ல இந்தக் கடையைத் தமது கூட்டசாலையாகப் பயன்படுத்துகின்றனர்! இங்கு ஒரு மேஸ்திரி சொன்னார் "கூடவொரு டீயும் காரவடையும் வாங்கித்தாரேன்டே, இன்னைக்கு பைப்லைன் வேலையை முடிச்சுருவோம் என்று பணிக்காரரைக் கொஞ்சியது நெஞ்சில் நிற்கிறது!


என்ன Cafe Coffee Day! அது அலுவலகமாகப் பயன்படுகிறதாகக் கூறுகிறார்கள்! இங்கு ஒரு கடை அலுவலகமாகவும், தொழில் பரிமாற்ற மையமாகவும், வேலையற்றோருக்கு அடைக்கலமாகவும் திகழ்கிறதே! அதுவல்லவோ சிறப்பு! அதுவும் சட்டைப்பை கனத்தை குறைக்காத விலையில்!

Friday, November 1, 2024

மெய்யழகன் - பார்கவன் சோழன்



சொந்த ஊரை விட்டு எதோ ஒரு நகரத்தில் தன் அடையாளத்தை துறந்து வாழும் மனிதர்களுக்குள் ஒரு கதை உண்டு. 

அவன் வாழ்ந்த ஊருக்கு மீண்டும் அங்கு வாழாத ஒருவனாக திரும்ப செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல.

அவனுக்கு அங்கு எல்லாரும் உண்டு ஆனால் அவன் வாழ்ந்த வீடு அவனிடம் இல்லை. வீடு தான் ஒருவனின் முகவரி. ஒரு பெரிய பாராம்பரிய குடும்பத்தின் வீட்டில் இருந்து தான் துவங்குகிறது மெய்யழகன்.

எனக்கும் இந்த கதைக்கும் ஒரு உறவு உண்டு. முதல் தொடர்பு சோழநாடு. எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பேச்சில் எப்படியும் ஒருமுறையாவது கும்பகோணம் என்கிற பெயர் வருவதை தவிர்க்க முடியாது. 

சோழ வளநாட்டில் இருந்து ஒரு வேளாண்குடி மேற்கு நோக்கி பாலைக்காட்டை அடைந்தார்கள். பாலக்காட்டை கேரளத்தின் நெற்களஞ்சியமாக மாற்றினார்கள். அது மற்றுமொரு தஞ்சாவூர் தான். எனக்கு தஞ்சை வேறு பாலக்காடு வேறல்ல. கண்ணாடி ஆறுக்கும் காவிரி ஆற்றுக்கும் என்ன பெரிய வேறுபாடு இருந்துவிட போகிறது.

அப்படியான ஒரு ஊரில் இருந்து நகரத்தை நோக்கி காலம் நகர்த்தியது. எனக்குள்ளும் ஒரு மெய்யழகன் எனும் கதைசொல்லி இருக்கதான் செய்கிறான். 

ஆம், ஒருவேளை அருள்மொழிக்கு பதிலாக மெய்யழகன் நகரத்திற்கு சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும். அவன் தான் நான், பெருநகரத்தில் வாழும் மெய்யழகன். என் சோழ வளநாட்டை பற்றியும் அவர்களின் புலம்பெயர் வரலாற்றை சற்று அதிகமாக தான் பேசிகொண்டிருக்கிறேன். 

படம் பார்த்த சிலர் என்ன பேசிகொண்டே இருக்கிறார்கள் என்று விமர்சிக்க பார்த்தேன். அது எங்கள் பிறப்பின் குணம் மாறாது. பேசிகொண்டே இருப்பார்கள். எங்கள் கூட்டத்திற்கு பேச நிறைய உண்டு. அவ்வளவு வரலாற்றை உள்ளடக்கிய கூட்டம் எங்கள் சோழ வள வளநாட்டினர்.

சோழன் கரிகால பெருவளத்தான் முதல் மேதகு பிரபாகரன் வரை பேசியது மேலும் என்னை மெய்யழகனோடு தொடர்புபடுத்தியது. ஆனால் அந்த காட்சிகள் தான் படத்தின் உயிரோட்டமே அவை பின்னாளில் நீக்கபட்டிருப்பது வருத்தம் தான். 

படம் வெளியான போதே பார்த்துவிட்டேன். அப்போதே தம்பிகள் ஒவ்வொருவரும் இதுகுறித்து எழுதுங்கள் என சொல்லிகொண்டே இருந்தார்கள். அதிலும் குறிப்பாக சோழ வளநாட்டில் வாழும் தம்பி ஒருவன் தொடர்ந்து இந்த படத்தை குறித்து பேசிகொண்டே இருந்தான். அவன் என் மெய்யழகன் அவனுக்கு சோழநாட்டை தவிர பேச வேறு ஒன்றும் இருந்ததில்லை. அவனின் பேச்சின் வாயிலாக நானும் தினம் என் சோழநாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். 

நன்றி இயக்குனர் பிரேம்குமார் உங்களையும் எங்களையும் சோழத்தையும் திரையில் காட்டியமைக்கு.

வெண்ணாறு கரையின் மெய்யழகன் வேறு யாருமில்லை வெண்ணாறு வெட்டிய விண்ணன் மரபினன் தான்.

- பார்கவன் சோழன்

அமெரிக்காவின் பொருளாதார சர்வாதிகாரம் - பார்கவன் சோழன்

டாலர் அல்லாத வேறு நாணயத்தை பயன்படுத்தினால் 100 % வரி விதிப்பேன் என இந்தியா, சீனா, ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் டிரம்ப்.  ...