Thursday, November 28, 2024

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. நேஷனல் லாட்ஜ்

 


நாவின் ஆந்திரத் தாகம்!

சென்னைமாநகரின் உணவுப்ப்ரியர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இது! ஆனாலும் நமது விருப்பமான சோற்றுக்கடைகளுல் இதுவும் ஒன்று! 

தேடி உணவு உண்ணும் வழமை உடையவன் தஞ்சையின் நாவுகளுக்கு சொந்தக்காரன் நண்பன் அருமை யோகேஸ்வரன் வள்ளிநாயகம், அவனோடு நாம் இன்னும் பயணித்தால் சோற்றுக்கடை புராணம் பலநூறு கட்டுரைகள் தாண்டும்! சமீபத்தில் எங்கள் நண்பன் மீனாட்சி சங்கர் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு சென்னை சென்றிருந்தோம்!

 அவ்வமயம் தனது இல்லத்தில் தங்க வேண்டும் என்று அன்புக்கட்டளை யோகேஷிடமிருந்து! என் இல்லாள் மற்றும் மகளோடு சிறப்பாய் அமைந்த அந்த பயண முடிவில் நாங்கள் சுமார் பத்து கிலோ ஏறிவிட்டோம் என்றால் மிகையல்ல.

அசைவ உணவுகள் மீது மிகுந்த ப்ரியமுடைய யோகி எங்களுக்காக சைவ உணவுகளைத் தேடித்தேடி இட்டுச் சென்றது அன்பின் பேரழகு!


சென்னையில் சௌகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் அமைந்துள்ள நேஷனல் லாட்ஜ்க்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கொடும்பசி விழி முட்டிய வேளையில்! 

வெகுநேர காத்திருப்புக்குப் பின் அருளால் கிட்டிய ஆசனத்தில் அமர்ந்து இருக்க, உணவு நம்மை அணைக்க வந்தது!

நல்ல வாழை இலையில் புளித்தொக்கு, உருளைப் பொறியல், பருப்பு கூட்டு, வலதுப்புற ஓரத்தில் தனக்கான இடம் என அமர்ந்த கோங்குரா சட்னி! பரிமாறும் போதே எப்படி சாப்பிட வேண்டும் என்ற பாடம் எடுத்தனர் திரு.யோகேஷ் மற்றும் மருத்துவர். நந்தினி யோகேஷ் ஆகியோர்! 

பருப்புப்பொடி வந்தது, நெய்க்குளம் வெட்டி சோற்றோடு குழப்பி பருப்பு கூட்டு கலந்து சற்றே கோங்குரா சட்னியைத் (புளித்தக்கீரை) தொட்டு தொண்டைக்குழியில் இறக்கையில் நாவரும்புகள் நன்றி சொல்லியது! கண்கள் பனிக்கப் பணிக்கப்பட்டது! என்னே ருசி!


நெடுங்காலமாக சென்னையில் பலர் ஆந்திரா மெஸ் பற்றிக் கூறியிருந்தாலும் நண்பன் இட்டுச்சென்ற சோற்றுக்கடை ........ இதில் நான் எதையும் நிரப்பவில்லை! உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்!

அடுத்து வந்த சாம்பார், இரசம், காரக் குழம்பு, மோர்க்குழம்பு, மோர் என வரிசையில் கும்பி நிறைந்தது!

சூடான சாதத்தில் இவையனைத்தும் ஐக்கியமாகி வயிறெனும் பானையை நிரப்பியது! மாங்காய் ஊறுகாய் வேறு ருசியாக இருந்தது!

கடைசியாக சீனி கொண்டாங்க என்றார் நமது நண்பர், வைத்திருந்த தயிரில் சர்க்கரை கலந்து அருமையான பண்டமாக்கித் தந்தார்! நெஞ்சும், வயிறும், கண்ணும் நிறைந்த உணவைத் தந்தருளிய சென்னை மாநகரிற்கு பெருநன்றி! 

வெளியே வருகையில், பருப்பு பொடி, ஊறுகாய் கிடைக்கும் என்றார்கள், வாங்கலாமா என்று மனைவியிடம் அனுமதி கேட்டால் சில உணவுகள் சாப்பிட நீங்கள் அந்தந்த இடத்துக்குத் தான் அழைத்து வரவேண்டும் என்று கட்டளை வந்தது! பதில் பேச முடியுமா???? கேள்வியை அனுபவஸ்தர்களுக்கே விட்டு விடுகிறேன்!


- கோமதி சங்கர் சுந்தரம்

No comments:

Post a Comment

அமெரிக்காவின் பொருளாதார சர்வாதிகாரம் - பார்கவன் சோழன்

டாலர் அல்லாத வேறு நாணயத்தை பயன்படுத்தினால் 100 % வரி விதிப்பேன் என இந்தியா, சீனா, ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் டிரம்ப்.  ...