சாலியர்தெரு மணிகண்ட விலாஸ்
இந்தக் கடையிருப்பதே நமக்குத் தெரியாது! தொண்டர்கள் நயினார் கோவிலில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழித்தடத்தில் சைவ மருத்துவ சமுதாய அனவரத விநாயகர் ஆலயத்திற்கு சமீபத்தில் பசுமையான ஒரு பழைய மரத்தடியில் அமைந்த சிறு உணவுக் கடை இது.
எனது இரண்டாவது மூத்த சகோதரருக்கு வரன் பார்த்து வந்த வேளையில் ஒருநாள் என் தந்தையார் எம்மை அழைத்து இந்தக் கடைக்கான வழியைக் கூறி கடையின் உரிமையாளரைச் சந்தித்து அவர்களின் கடைக்கருகே ஒரு வரன் இருப்பதாகக் கூறினார், அந்த வரன் விபரங்களை வாங்கி வா என்றார்.இதைக்கூறி முடித்துவிட்டு மணிகண்ட விலாஸ்ல சாப்டுருக்கியா, அருமையா இருக்கும் என்றார்? அப்போது தான் காலை உணவு கும்பி முட்ட உண்டு வரும் எனக்கு இது தேவையில்லாத கேள்வியாகத் தோன்றியது..... ஆனாலும் நெஞ்சோரத்தில் இந்தக் கடையில் உண்ண ஆர்வம் இருந்தது, ஆனால் வயிற்றில் இடமில்லையே !
பின்னர் ஒரு நாள் எமது நண்பன் பூபதியும் நானும் மானூர் கிளம்பிச் செல்லும் காலையில் நண்பனை மணிகண்ட விலாஸ் இட்டுச் சென்றோம்.காலையில் சூடான பொங்கல், ஃபுஃப்வென்ற பூரிப்பான பூரி, மெது மெது இட்லி, மொறு மொறு காரவடை என்று அனைத்தையும் பரிசோதித்தோம்! இதில் இந்தக் கடையில் காலையிலேயே ஆப்பமும், தயிர்சாதமும் உண்டாம்! அதை உண்டதில்லை!
இந்தக் கடை நெல்லை நகரின் மிகப்பழைய சோற்றுக்கடைகளுல் ஒன்று, அன்றாடம் காலை நாட்சம்பளத்திற்காக வேலைக்கு செல்லும் அனைவருக்கும் கேந்திரமாக உள்ளது.மேஸ்திரிகள், தச்சர்கள், பெயிண்டர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் உழைக்கும் வர்க்கத்தினரை தாம் அழைத்துச் செல்ல இந்தக் கடையைத் தமது கூட்டசாலையாகப் பயன்படுத்துகின்றனர்! இங்கு ஒரு மேஸ்திரி சொன்னார் "கூடவொரு டீயும் காரவடையும் வாங்கித்தாரேன்டே, இன்னைக்கு பைப்லைன் வேலையை முடிச்சுருவோம் என்று பணிக்காரரைக் கொஞ்சியது நெஞ்சில் நிற்கிறது!
என்ன Cafe Coffee Day! அது அலுவலகமாகப் பயன்படுகிறதாகக் கூறுகிறார்கள்! இங்கு ஒரு கடை அலுவலகமாகவும், தொழில் பரிமாற்ற மையமாகவும், வேலையற்றோருக்கு அடைக்கலமாகவும் திகழ்கிறதே! அதுவல்லவோ சிறப்பு! அதுவும் சட்டைப்பை கனத்தை குறைக்காத விலையில்!
சிறப்பாக கூறினீர்கள் அண்ணா. சிறு தொழிற்கூடங்களுக்கு ஆதரவளிப்போம். நம்மை சுற்றி உள்ள, புராதான, பாரம்பரிய இடங்களை அடுத்த தலைமுறையும் காண வழிவகுப்போம்.... உங்கள் தொடர் நாவில் உமிழ்நீரை நர்த்தனமாடவைக்கும் என எண்ணுகிறேன்... வாழ்த்துகள் ...
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDelete