Friday, November 1, 2024

மெய்யழகன் - பார்கவன் சோழன்



சொந்த ஊரை விட்டு எதோ ஒரு நகரத்தில் தன் அடையாளத்தை துறந்து வாழும் மனிதர்களுக்குள் ஒரு கதை உண்டு. 

அவன் வாழ்ந்த ஊருக்கு மீண்டும் அங்கு வாழாத ஒருவனாக திரும்ப செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல.

அவனுக்கு அங்கு எல்லாரும் உண்டு ஆனால் அவன் வாழ்ந்த வீடு அவனிடம் இல்லை. வீடு தான் ஒருவனின் முகவரி. ஒரு பெரிய பாராம்பரிய குடும்பத்தின் வீட்டில் இருந்து தான் துவங்குகிறது மெய்யழகன்.

எனக்கும் இந்த கதைக்கும் ஒரு உறவு உண்டு. முதல் தொடர்பு சோழநாடு. எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பேச்சில் எப்படியும் ஒருமுறையாவது கும்பகோணம் என்கிற பெயர் வருவதை தவிர்க்க முடியாது. 

சோழ வளநாட்டில் இருந்து ஒரு வேளாண்குடி மேற்கு நோக்கி பாலைக்காட்டை அடைந்தார்கள். பாலக்காட்டை கேரளத்தின் நெற்களஞ்சியமாக மாற்றினார்கள். அது மற்றுமொரு தஞ்சாவூர் தான். எனக்கு தஞ்சை வேறு பாலக்காடு வேறல்ல. கண்ணாடி ஆறுக்கும் காவிரி ஆற்றுக்கும் என்ன பெரிய வேறுபாடு இருந்துவிட போகிறது.

அப்படியான ஒரு ஊரில் இருந்து நகரத்தை நோக்கி காலம் நகர்த்தியது. எனக்குள்ளும் ஒரு மெய்யழகன் எனும் கதைசொல்லி இருக்கதான் செய்கிறான். 

ஆம், ஒருவேளை அருள்மொழிக்கு பதிலாக மெய்யழகன் நகரத்திற்கு சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும். அவன் தான் நான், பெருநகரத்தில் வாழும் மெய்யழகன். என் சோழ வளநாட்டை பற்றியும் அவர்களின் புலம்பெயர் வரலாற்றை சற்று அதிகமாக தான் பேசிகொண்டிருக்கிறேன். 

படம் பார்த்த சிலர் என்ன பேசிகொண்டே இருக்கிறார்கள் என்று விமர்சிக்க பார்த்தேன். அது எங்கள் பிறப்பின் குணம் மாறாது. பேசிகொண்டே இருப்பார்கள். எங்கள் கூட்டத்திற்கு பேச நிறைய உண்டு. அவ்வளவு வரலாற்றை உள்ளடக்கிய கூட்டம் எங்கள் சோழ வள வளநாட்டினர்.

சோழன் கரிகால பெருவளத்தான் முதல் மேதகு பிரபாகரன் வரை பேசியது மேலும் என்னை மெய்யழகனோடு தொடர்புபடுத்தியது. ஆனால் அந்த காட்சிகள் தான் படத்தின் உயிரோட்டமே அவை பின்னாளில் நீக்கபட்டிருப்பது வருத்தம் தான். 

படம் வெளியான போதே பார்த்துவிட்டேன். அப்போதே தம்பிகள் ஒவ்வொருவரும் இதுகுறித்து எழுதுங்கள் என சொல்லிகொண்டே இருந்தார்கள். அதிலும் குறிப்பாக சோழ வளநாட்டில் வாழும் தம்பி ஒருவன் தொடர்ந்து இந்த படத்தை குறித்து பேசிகொண்டே இருந்தான். அவன் என் மெய்யழகன் அவனுக்கு சோழநாட்டை தவிர பேச வேறு ஒன்றும் இருந்ததில்லை. அவனின் பேச்சின் வாயிலாக நானும் தினம் என் சோழநாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். 

நன்றி இயக்குனர் பிரேம்குமார் உங்களையும் எங்களையும் சோழத்தையும் திரையில் காட்டியமைக்கு.

வெண்ணாறு கரையின் மெய்யழகன் வேறு யாருமில்லை வெண்ணாறு வெட்டிய விண்ணன் மரபினன் தான்.

- பார்கவன் சோழன்

No comments:

Post a Comment

அமெரிக்காவின் பொருளாதார சர்வாதிகாரம் - பார்கவன் சோழன்

டாலர் அல்லாத வேறு நாணயத்தை பயன்படுத்தினால் 100 % வரி விதிப்பேன் என இந்தியா, சீனா, ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் டிரம்ப்.  ...