Friday, October 18, 2024

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. தெற்கு இரத வீதி மாரியம்மன் விலாஸ்!

 


திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தெற்கு இரத வீதியில் அமைந்துள்ள இந்தக் கடை அதிகாலை முதல் பின்னிரவு வரை அணையா அடுப்புடை சோற்றுக்கடையாம்! 

காலை உணவில் மொச்சை, உளுந்தங்களி, வெந்தயக்களி என்று திருநெல்வேலியின் தனித்துவமான தனித்தனி உணவுகள் மற்றும் விஞ்சை விலாஸின் தாக்கமோ என்னவோ இட்லியோடு முறுக்கு, தட்டை, சீடை என பல வகை நொறுக்கல்களும் உண்டு மகிழலாம்.

வடை வகைகளோடு சூடான அதிரசம் சில நேரம் கிடைக்கும்! ஒரு நேரத்தில் ஐந்து பேர் அமர்ந்து உண்ணலாம்! அவ்வளவே இடம் உள்ள இந்தக் கடைக்கு தனிப்பெயர் தருவது திருபாகம்.

திருபாகம் திருநெல்வேலியின் தனிப்பெரும் சிறப்புடைய உணவு, திருநெல்வேலியில் அல்வா எவ்வளவு இன்று சிறப்போ அது போல சிறப்பு திருபாகம்.

சந்திப்பிள்ளையார் முக்கு போத்தி ஹோட்டல் திருபாகம் மற்றும் தவல் வடைக்காக சொத்தையழித்த மக்கள் நெல்லையில் இருந்தனர் என்றால் மிகையல்ல. பல பெரியவர்கள் இதை உண்டதை சிலாகித்துள்ளனர்! அந்த போத்தி ஹோட்டல் திருபாகமோ தவல் வடையோ சுவைத்தறியா பாவப்பட்ட எங்கள் நாவுகள் சுவைத்து உய்வுற்றது மாரியம்மன் விலாஸ் திருபாகம் தான்! திருபாகத்திற்கு நகரில் இரண்டு கடை இன்று, ஒன்று மாரியம்மன் விலாஸ், மற்றொன்று வாகையடி லாலா. தவல் வடை பற்றி காதால் கேள்வி மட்டுமே பட்டுள்ளோம் என்று சோகத்தோடு கூறிக்கொள்கிறேன்.

இந்த மாரியம்மன் விலாஸின் மற்றுமொரு சிறப்பு இவர்தம் போளி! நாவில் வைத்தால் கரையும் அற்புத போளி இல்லாமல் எந்த விழாவும் எங்கள் வீட்டில் நடப்பதில்லை! அதிலும் பாயசத்தில் போளியும், பப்படமும் வாழைப்பழமும் என்று கலந்து சுவைத்து இரசிப்பவர் சொர்க்கத்தின் வாசல்படி கண்டு வருபவரே!


- கோமதி சங்கர் சுந்தரம்

No comments:

Post a Comment

அமெரிக்காவின் பொருளாதார சர்வாதிகாரம் - பார்கவன் சோழன்

டாலர் அல்லாத வேறு நாணயத்தை பயன்படுத்தினால் 100 % வரி விதிப்பேன் என இந்தியா, சீனா, ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் டிரம்ப்.  ...