மதுரை வில்லாபுரத்தில் இறைவனும் இறைவியும் வந்து அருள்புரியும் பாவக்காய் மண்டபம் ஒன்று உண்டு. இந்த மண்டபம் வேளாளரில் வீரக்கொடியார் மரபினருடையது. மதுரை வில்லாபுரம் பகுதியில் அழகப்பிள்ளை வகையறா, தானப்பிள்ளை வகையறாவிற்கு பாத்தியப்பட்ட வேளாளர்கள் பெருமக்கள் வசித்து வருகிறார்கள். இதுகுறித்து தானப்பிள்ளை வம்சத்தை சேர்ந்த அன்பர் ஜெயபாலன் அவர்களிடம் பேசினோம். அவர் கூறிய வரலாற்று செய்திகள் புதிதாக இருந்தது. அதை வெளிகொண்டு வருவது நம் கடமை.
வில்லாபுரம் அழகப்பிள்ளை, தானப்பிள்ளை இருவரும் சகோதரர்கள். இதில் அழகப்பிள்ளை பாண்டியர்களின் அரசவையில் அமைச்சர், தானப்பிள்ளை பாண்டியர்களின் படையில் வீரமிகுந்த தளபதியாக விளங்கியவர். அழகப்ப பிள்ளை, தானப்ப பிள்ளை என்கிற பெயர் தான் காலப்போக்கில் அழகப்பிள்ளை, தானப்பிள்ளை என மாறியுள்ளது. அழகப்பன் என்பது மதுரையை ஆளும் அரசர் சொக்கநாதரின் பெயர். சொக்கர் என்றால் அழகர் என பொருள், இறைவனை அப்பன் என்றழைப்பது நம் மரபு அதுவே அழகப்பன். தானப்பன் என்ற பெயரும் சொக்கநாதரை குறிக்கும் பெயர் தான். உலகத்திற்கே தான் அப்பன் என்பதனைக் குறிப்பது தான் தானப்பன்.
முன்பொரு காலத்தில் மதுரை வில்லாபுரம் பகுதி வில்வமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்திருக்கின்றது. மதுரை சொக்கநாதனின் பூசைக்கு வில்வ இலைகள் இந்தப்பகுதியில் இருந்து தான் சென்றிருக்கிறது. வேளாளரில் வீரக்கொடியார்கள் செந்தமிழ் மரபில் தலைசிறந்த போர் மரபினர். வேளாளர்கள் சைவ வழிபாட்டிலும் பாண்டிய நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதிலும் சிறந்தவர்கள்.. பாண்டிய அரசின் போர்ப்படைகள் வில்லாபுரத்தில் தான் இருந்துள்ளது. அதற்கு சான்றாக இன்றும் ஆனைக்கட்டிமேடு உள்ளது.
வில்லாபுரத்தில் பாவக்காய் மண்டபம் புகழ்மிக்க மண்டபம் சித்திரை திருவிழாவின் போது இறைவன் இறைவி வீதியுலாக்களில் கோவிலுக்கு வெளியே வரும் மண்டகப்படியில் நான்காம் திருநாள் அன்று முதல் மண்டகப்படியாக வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்திற்கு வருகை புரிகிறார்கள் . மதுரையின் அரசர் சொக்காநாதரும் அரசியார் அங்கையற்கண்ணி அம்மையும். அன்றைய நாள் முழுவதும் வேளாளர்களின் பாவக்காய் மண்டபத்தில் தங்குவது சிறப்பு.
மக்களின் பாவங்களை காய்க்கச் செய்ய இறைவனும் இறைவியும் இங்கு வருகை புரிவதால் இந்த மண்டபம் பாவக்காய் மண்டபம் என சிறப்பு பெற்றது.
மேலும் அன்பர் ஜெயபாலன் அவர்கள் நமக்கு பகிர்ந்த செய்திகள்,
"மதுரையின் தென் எல்லையில் நான்மாடக்கூடலின் வெளிவீதி கடந்ததும் மதுரையின் தெற்கு நுழைவு வாயிலாக திகழும் ஊர் வில்லாபுரம்.அங்கு அழகப்பிள்ளை தானப்பிள்ளை சகோதரர்கள் எழுப்பிய எல்லை காவல்தெய்வங்கள் அருள்மிகு காளியம்மன் முனியாண்டி சாமி கோலில். இதில் காளியம்மன் வடக்கு திசை நோக்கி (மீனாட்சி அம்மன் கோவிலை நோக்கி) அமைந்தது. வில்வக்காடுகளுளின் தென் எல்லையில் முனியாண்டி அரூப வடிவில்.
வில்வபுரம் ஊருக்கு மேற்கே அமைத்தது கடல் போன்ற ஏரி.இதன் வடகிழக்கு மூலையில் (ஈசானிய மூலை) பாவக்காய் மண்டபமும் தென்மேற்கு மூலையில் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடுதிருப்பரங்குன்றம் என்கிற பாடல்பெற்ற திருத்தலம்,
வில்லாபுரம் அழகப்பிள்ளை தானம் பிள்ளை மரபு வழியினர்,தம் குலதெய்வமாக
"பட்டத்தரசி பார்வதி அம்மச்சியார்"
1. இறைவியே மதுரை மண்ணில் பட்டத்தரசி (அங்கையற்கண்ணி) ஆகவும்,
2. உலகை காக்கும் பார்வதியாகவும்,
3. தம் குலம் காக்கும் தாய் அம்மச்சியாகவும்
மூன்று தனிவடிவங்களாக மூவரும் ஒரே சன்னிதியில் ஒருங்கே அமைந்து
மாதம் ஒருமுறை பௌர்ணமி நாளில் மட்டுமே சன்னதி திறக்கப்பட்டு பூசைகள்நடைபெறும்.மற்ற நாட்களில் கதவுகளுக்கு மட்டுமே பூசைகள் செய்யப்படும்.இம் மூன்றில் ஒன்றாகிய சிவசக்தியின் கோவில்.மதுரை வைகை ஆற்றுக்கு வடகரையில் செல்லூரில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் தென்கோடி வில்லாபுரத்தில் இருந்து கரகம் முளைப்பாரி சகிதம் வேளாளர் குலம் மாசி மகாசிவராத்திரியில் விடியவிடிய குறு தெய்வங்களுடன் சேர்ந்து பட்டத்தரசி பார்வதி அம்மச்சியார் அவர்களுக்கு விழா நடத்துவதுண்டு.
தளபதி தானப்பிள்ளை வகையினர் வடக்கு தெற்கு என எல்லைகாத்து நிற்கும் தெய்வங்களை படைமாட்சியோடு வணங்குவதாக இவ்வேளாண் குல குறியீடுகள் அமைந்துள்ளன."
பகுதிசார் மக்களை பற்றி ஆய்வறிதல் எனும் மானிடவியல் ஆய்வுகளில் பல ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். அந்த வகையில் பாண்டியர் போர்படையினர் குறித்த இந்த வரலாறும் மிக முக்கியமானதாக கருதுகிறேன்.
- பார்கவன் சோழன்...
இது போன்ற அரிதான அற்புதமான வரலாற்று ஆவணங்களை எழுதிய , அதற்க்கான முயற்ச்சிகளை மேற்கொண்ட இருவருமே பாராட்டுக்குரியவர்களே. Congrats
ReplyDelete