வ.உ.சிதம்பரனாரே என் அரசியல் குரு என்றவர் பெரியார்.
இந்த செய்தி 1986 ல் கவிஞர் இளந்தேவன் தொகுத்து வெளியான வ.உ.சிதம்பரனார் வரலாறு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தேசபக்த சிங்கம் சிதம்பர தங்கம்" இதுவும் வஉசி குறித்து குடியரசு இதழில் பெரியார் எழுதியது தான்.
வ.உ.சி பற்றி பெரிதாக ஒன்றும் செய்தி வெளியிடாத ஹிந்து, மெயில், சுதேசமித்திரன், ஜெயபாரதி,
தினமணி போன்ற செய்திதாள்களையும் தன் குடியரசில் உணர்ச்சி பொங்க விமர்சிக்கிறார் பெரியார்,
"வ.உ.சிதம்பரம்பிள்ளை பிரம்மா தலையிலிருந்து வெடித்தெழுந்த வ.உ.சிதம்பர அய்யராயிருந்தால்,
ஹிந்து, சுதேசமித்திரன், ஜெயபாரதி, தினமணி முதலிய பழுப்பு வெள்ளை பத்திரிகைகளிலும் மெயில் போன்ற வெளுப்பு பார்ப்பன பத்திரிகைகளிலும் வேறு விஷயங்களுக்கு இடமிருக்குமா?"
"சிதம்பரம்பிள்ளை விஷயத்தில் மவுனம் சாதிக்கும் ஜாதிப்பித்து பிடித்த பார்ப்பன பத்திரிகைகளின் போக்கைக் கண்ட பின்னாவது, பார்ப்பனரல்லாதாருக்கு ஆத்திரம் பொங்குமா? (29.11.1936 குடிஅரசு)"
இந்த செய்திகள் எல்லாம் மிகமுக்கியமான வரலாறு. வ.உ.சியை கொண்டாடியவர்கள் யார் என நமக்கு காட்டுவன.
அதேபோல் வ.உ.சியை அன்றைய இந்திய அரசியலில் இருட்டடிப்பு செய்தது குறித்து பெரியார் 1936 ல் குடியரசு இதழில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரானால் லோக மானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பரநாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கழுத்து சிலை, சிதம்பரம் உருவப் படம் இருக்கும் படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை; அதுவும் சைவப் பிள்ளை ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு அவருக்காக ஏற்படுத்தப் பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது"
அடுத்து தமிழர் தலைவர் வஉசி அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறியதை பற்றி,
"நாயக்கரை எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள் சிலர் வந்து புகுந்த பிற்பாடு, நானும், அவரும் விலகிவிட்டோம்."
(படத்தில் : பெரியாரும், தமிழர் தலைவர் வ.உ.சியும்)
இந்த வரலாறு எல்லாம் பார்க்கிறபோது தமிழ்நாட்டில் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை போன்ற கருத்தியலுக்கு வித்திட்டதில் தலைவர் வ.உ.சி அவர்களின் பங்கு அளபரியது. அன்று பார்ப்பன இயக்கங்களும், அவர்களின் பத்திரிக்கைகளும் வ.உ.சியை ஏற்காதது போல் இன்று தமிழ்நாட்டு அரசியல் சூழலிலும் வ.உ.சி பற்றி பெரிதாக பேசுவதில்லை. இன்னும் ஒருபடி மேல் சென்று திராவிட கொள்கையினர் சிலர் தலைவர் வ.உ.சியை பெரியாருடன் ஒப்பிட்டு தாழ்த்தியும் பேசி வருகின்றனர். ஆனால் பெரியாரே தலைவர் வ.உ.சியை தன் அரசியல் குரு என்கிறார். அன்று பெரியார் குடியரசில் எழுதிய செய்திகள் இன்றும் மாறிடவில்லை. இன்று வஉசியை ஏற்க முற்போக்கு இயக்கங்களில் சிலரும் தயங்கியே வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.
தமிழர் தலைவர் முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி வஉசி அவர்களையும் அவர்தம் வழியை ஏற்று கொண்டு பயணித்த ஒவ்வொருவருக்கும் மதிப்பு அளிப்பது நம் பண்பாகும். அன்று தன் அரசியல் குரு வ.உ.சிக்காக பெரிதும் பேசியவர் பெரியார் ஒருவரே.
- பார்கவன் சோழன்.